அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமன மொரகஹப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கே. இந்திராணி மல்லிகா என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (24) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிப்பறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டின் பின்புறம் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. கிராமத்தைச் சூழவுள்ள ‘நெல்லி கேளே’ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு இரவு வேளைகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாகவும், அவ்வாறு வந்த யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை – மட்டக்களப்பு பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சி, உதவி காவல் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், கிழக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை மற்றும் தமனை வனஜீவராசிகள் கள அலுவலக உத்தியோகத்தர்களான கிஹன் நிர்மல மற்றும் பிரியந்த பத்மலால் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














