நாட்டின் நெற்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்து, ஒரு ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டன் வரை விளைச்சலைப் பெற முடியும் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் “சுபிரி வீ யாய 10” தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 8.30 மணிக்கு பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த அவர்களின் வழிகாட்டல் மற்றும் எண்ணக்கருவிற்கமைய, விவசாயத் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களங்கள், இலங்கை மகாவலி அதிகாரசபை, பல்கலைக்கழகங்களின் விவசாய விஞ்ஞான பீடங்கள் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இவ் ஆரம்ப விழாவில் அமைச்சர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், விவசாயத் துறையின் உயரதிகாரிகள் மற்றும் பிராந்திய அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஒரு ஹெக்டேருக்கு 0.4 மெட்ரிக் டன்னாக இருந்த சராசரி நெல் விளைச்சல், ‘யாய’ (வயல்வெளி) எண்ணக்கரு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்ததன் ஊடாக தற்போது சுமார் 4.5 மெட்ரிக் டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 500 வயல்வெளிகளை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட ‘யாய 500’ வேலைத்திட்டத்தின் மூலம் விளைச்சலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் மேலும் 500 வயல்வெளிகளை இணைத்து, மொத்த வயல்வெளிகளின் எண்ணிக்கை 1,000 ஆக விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே சில வயல்வெளிகளில் ஹெக்டேருக்கு 7.5, 9, 10 மற்றும் 11.2 மெட்ரிக் டன் வரை பதிவான அதிகபட்ச விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 11 வயல்வெளிகளை மையப்படுத்தி இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை செயல்படுத்தப்படவுள்ளது.
புதிய தலைமுறை உரங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களுடன் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், உற்பத்திச் செலவு பற்றிய ஆய்வுகள் மற்றும் மண்வளப் பாதுகாப்பு (கோழி எரு போன்ற சேதனப் பசளைகளின் பயன்பாடு உட்பட) ஆகியவற்றில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
நெல் விளைச்சல் அதிகரிப்பதோடு, நெற்செய்கைக்குப் பொருத்தமற்ற, குறைந்த வருமானம் தரும் அல்லது சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளை அடையாளம் கண்டு அவற்றில் தானியங்கள், பயறு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் பயிரிடுவதன் மூலம் இறக்குமதிச் செலவைக் குறைத்து அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் சேமித்துக்கொள்ள முடியும்.
இவ்வேலைத்திட்டம் அரிசி உற்பத்தியை முடக்கும் முயற்சி அல்ல என்பதும், தற்போது நாட்டில் போதுமான அளவு அரிசி உற்பத்தி காணப்படுகின்றது என்பதும் இதன்மூலம் வலியுறுத்தப்படுகின்றது.
“இந்த வயல்வெளிகளைக் கண்காணித்து, அவற்றின் தொழில்நுட்பத்தையும் எண்ணக்கருவையும் ஏனைய வயல்வெளிகளுக்கும் கொண்டு செல்வதே எமது பிரதான நோக்கமாகும். எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 8.30 மணிக்கு பொலன்னறுவையில் ஒன்றுகூடி, இச்செய்தியை நாடளாவிய ரீதியில் கொண்டு சென்று விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக அணிதிரளுமாறு அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும் பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.”
என விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்கிரமாராச்சி தெரிவித்தார்.














