நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்கப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காகப் பதிவு செய்துள்ளார். அவரது பரீட்சை தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக உளவியல் சமூக ஆலோசனை சேவைகளை ஏற்பாடு செய்யுமாறு, அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் ‘அர்த்த’ (Artha) வேலைத்திட்டத்தின் கீழ், அச்சிறுமி கட்டாயக் கல்வி வயதை நிறைவு செய்யும் வரை அல்லது தனது விருப்பத்திற்கேற்ப உயர் கல்வி அல்லது தொழிற்கல்சியைத் தொடரும் வரை இக்கொடுப்பனவு வழங்கப்படும். நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள குழந்தைகள், பாதுகாப்புக் காவலில் உள்ளவர்கள் மற்றும் வீதிவாழ் குழந்தைகளுக்கு ‘அர்த்த’ வேலைத்திட்டம் மூலமாக நிதி உதவி வழங்கப்படுகின்றது.










































