பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் தவறவிட்ட கைப்பையை எடுத்துச் சென்ற, நுவரெலியா கந்தபொல பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) அன்று ஆஜராகியுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஹட்டனுக்கு வருகை தந்திருந்த, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த 09ஆம் திகதி நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது, நுவரெலியா நகர மத்தியிலுள்ள உணவகமொன்றில் மதிய உணவு அருந்திய பின்னர், கதிரையின் கைப்பிடியில் மாட்டியிருந்த தனது கைப்பையை மறந்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
மறுநாள் இது குறித்து விசாரிப்பதற்காகக் குறித்த உணவகத்திற்குச் சென்ற போது, உணவகத்திற்கு வருகை தந்த வேறொரு பெண் அந்தக் கைப்பையை எடுத்துச் செல்லும் காட்சியடங்கிய சிசிடிவி (CCTV) காணொளிகளை உணவக நிர்வாகம் மாணவியிடம் வழங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய பெண்ணும் அவரது குடும்பத்தினரும் நுவரெலியாவில் நடமாடிய சிசிடிவி காணொளிகளைப் பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர். இதேவேளை, குறித்த பெண் கைப்பையை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் திங்கட்கிழமை (16) சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த கைப்பையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் தம்பதியினர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (17) ஆஜராகியுள்ளனர்.
இதன்போது, தாம் அறியாமையினால் குறித்த கைப்பையை கடந்த 09ஆம் திகதி எடுத்துச் சென்றதாகவும், அதிலிருந்த சில பணத்தாள்களை எடுத்துவிட்டு, கைப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கோரி அன்றைய தினமே நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கு பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம் அதனை ஒப்படைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான செய்திகள் கடந்த 16ஆம் திகதி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கைப்பையின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று அவரைத் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த பின்னர், பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, இரு தரப்பினரையும் மற்றும் கைப்பையைப் பொறுப்பேற்ற பொலிஸ் சார்ஜன்ட்டையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
இதன்போது, கைப்பை தமக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்திய மாணவி, அதற்குள் இருந்த பணம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிரித்தானிய வதிவிட அட்டை (BRP card) ஆகியவை காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைப்பையைப் பொறுப்பேற்ற பொலிஸ் சார்ஜன்ட், உரிய நடைமுறைகளுக்கு அமைவாக அதனைப் பொறுப்பேற்காமல், அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் அன்றாட கடமையில் ஈடுபட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் அதனை ஒப்படைத்ததாகப் பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைப்பையில் இருந்த பணம் தமக்குத் தேவையில்லை எனவும், ஏனைய ஆவணங்கள் அனைத்தும் மீளக் கிடைக்கும் வரை கைப்பையைத் தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் மாணவி பொலிஸாரிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த நான்கு தரப்பினரையும் எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










































