பசறை, கோனகலை தோட்டம் கஹவத்தை பிரிவில்
மரமொன்றின் கிளையை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர் தவறி கீழே விழுந்து நேற்று (17) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பி. ஜீவகுமார் என்ற 50 வயதுடைய, கோணகலை கஹவத்தை, பசறை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரும் மற்றுமொரு நபரும் கோணகலை தோட்டத்திற்குச் சொந்தமான கஹவத்தை பிரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட எரமுது அல்லது ( முருக்கத்தட்ட ) எனப்படும் மரமொன்றின் கிளைகளை வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து மரத்திலிருந்து கீழே இறங்கிய அவர், கிளையொன்று கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அதை வெட்டுவதற்கு முற்பட்ட வேலை
தவறி கீழே விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக பசறை கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










































