இந்தியர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் அரிசி சாதம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பல வீடுகளில் மதியமும், இரவும் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு வேளை சாதம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்பதால், அரிசியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.
உண்மையில் சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா? என்பதை அறிய, உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (World Diabetes Day), SPARSH மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியல் மற்றும் நீரிழிவு நோயியல் துறை ஆலோசகர் Dr.ஷியாம் சுந்தர் சி.எம். அணுகினோம். அவர் பகிர்ந்துகொண்ட முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம்.சாதத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் மற்ற சத்தான உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது செரிமானத்தின்போது குளுக்கோஸாக மாறுவதால், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக, வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் அனைவரும் வெள்ளை அரிசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
மருத்துவர் ஷியாம் சுந்தர் கூற்றுப்படி, “அரிசியை உணவில் இருந்து முழுமையாக நீக்க வேண்டிய அவசியமில்லை. நாம் சாப்பிடும் அளவு, அரிசியின் வகை, உணவில் இடம்பெறும் மற்ற உணவுகள் மற்றும் ஒவ்வொருவரின் உடலில் ரத்த சர்க்கரை அளவு எவ்வாறு மாறுகிறது என்பதுதான் முக்கியம்” என்கிறார்அரிசியின் வகையும் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது, பிரவுன் ரைஸ் அல்லது குறைவாகச் சுத்திகரிக்கப்பட்ட அரிசி வகைகளை தேர்வு செய்யலாம். எந்த வகையான அரிசியாக இருந்தாலும், அதன் அளவும் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் முறையும் மிகவும் முக்கியம் என்கிறார் மருத்துவர்.சர்க்கரை நோயாளிகள் சாதத்தை முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, உணவுத் தட்டில் மற்ற சத்தான உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து மருத்துவர் ஷியாம் சுந்தர் பகிர்ந்த வழிமுறையை காணலாம்.
- பாதி தட்டில் காய்கறிகள்: உணவுத் தட்டில் பாதியளவு பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெள்ளரிக்காய் போன்ற மாவுச்சத்து குறைவான காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
- கால் பங்கு புரதச்சத்து உணவுகள்: மீதமுள்ள தட்டில் கால் பங்கை முட்டை, மீன், பருப்பு மற்றும் பயறு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு ஒதுக்கலாம். இவை உணவைச் சமநிலைப்படுத்த உதவும்.
- கால் பங்கு சாதம்: உணவு தட்டில் மீதமுள்ள கால் பங்கை சாதம் அல்லது மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு ஒதுக்கலாம். ஆரோக்கியமான அரிசி வகையாக இருந்தாலும் அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், வழக்கமான உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல் உணவின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.உணவு சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிப்பதன் மூலம், எந்த உணவு மற்றும் எவ்வளவு அளவு தங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரே அளவு சாதத்தை சாப்பிட்டாலும் இரண்டு சர்க்கரை நோயாளிகளுக்கும் ரத்த சர்க்கரை அளவில் வெவ்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், உடற்பயிற்சி, இன்சுலின் செயல்பாடு மற்றும் மெட்டபாலிசம் போன்ற காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து, அதன் முடிவுகளை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறுவது அவசியம்.சர்க்கரை நோய் மேலாண்மை என்பது நமக்கு பிடித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது மட்டுமல்ல. உணவின் அளவு, உணவுத் தேர்வு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதும் முக்கியம்.
ஷியாம் சுந்தர் சி.எம். கூறுகையில், “சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு உணவின் அளவில் கவனம் செலுத்துதல், சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ற மருத்துவ ஆலோசனை ஆகியவை அவசியம்” என்கிறார்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு வேளை சாதம் சாப்பிடுவது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. எவ்வளவு சாதம் சாப்பிடுகிறோம், அதனுடன் என்ன உணவுகளை சேர்த்துக்கொள்கிறோம், சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது என்பதைக் கவனிப்பதே முக்கியம்.








































