நாடு முழுவதும் சுகாதாரமான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் பழங்களைப் பழுக்க வைக்கும் புதிய நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவினால் இந்த நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவகத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் உணவுத் தரப் பரிசோதனைகள், தரமான உணவு உற்பத்தி தொடர்பான பயிற்சிகள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
நாடு முழுவதும் சுகாதாரமான முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் பழ வியாபாரிகளுக்கு பழங்களைக் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் கூடைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசந்த நவரத்ன, சேன நானயக்கார, தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹித பிரசாந்த உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.










































