பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரை 2026 நவம்பர் 17ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், அன்றைய தினம் மீளவும் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் 2026 நவம்பர் 16ஆம் திகதியன்று உத்தரவு பிறப்பித்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த குறித்த தேரர், சனிக்கிழமை (14) இரவு திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது, ‘தேரர் சில தினங்களுக்கு முன்னர் இந்த மன்றையும், நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் ஊடகங்கள் முன்பாகக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இவர் நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டுள்ளார்’ எனத் தீர்மானம் வழங்குமாறு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினர் இடையீட்டு மனுவொன்றை மன்றில் சமர்ப்பித்து கோரிக்கை விடுத்தனர்.
மேலும், ‘திருகோணமலை கடற்கரை சட்டவிரோத புத்தர் சிலை தொடர்பான வழக்கில், தேரருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள பிணை விடுவிப்பு நிபந்தனைகள் இரண்டை இவர் மீறியுள்ளார். எனவே, இவருக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதி இடைநிறுத்தப்பட வேண்டும்’ எனத் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தைக் கோரினார்.
இதேவேளை, தேரர் தமது தரப்பில் நீதிபதியின் அனுமதியுடன் தாமே கருத்துகளை முன்வைத்தார். இந்நிலையில், அனைத்து தரப்பினரின் வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2026 நவம்பர் 17ஆம் திகதியன்று தீர்மானம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, வழக்கினை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தார்.






































