கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய வழிநடத்தல் குழு கூடுகிறது
கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கவனம் செலுத்துகிறார்
2026 நவம்பர் 17ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்ற வளாகத்தில், கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய வழிநடத்தல் குழுக் கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேலும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக, அதனுடன் தொடர்புடைய பணிகளின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதுடன், எதிர்வரும் காலப்பகுதியில் இச்செயற்பாட்டை முன்னெடுக்கும்போது ஏற்படக்கூடிய சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, டிஜிட்டல் செயலணியினால் (Digital Task Force) பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் கற்றல் கருவிகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பை (NEMIS) நடைமுறைப்படுத்துவதன் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
புதிய கலைத்திட்ட அபிவிருத்தியின் (Curriculum Development) கீழ் முன்மொழியப்பட்டுள்ள கலைத்திட்டக் கட்டமைப்பு, பாட உள்ளடக்கங்களைப் புதுப்பித்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக, மதிப்பீடு மற்றும் கணிப்பீட்டு முறைகள், கல்வி நிர்வாக மறுசீரமைப்புகள் மற்றும் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான முன்னேற்றங்களும் மீளாய்வு செய்யப்பட்டன.
மனித வள அபிவிருத்தி தொடர்பில், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் தொழில்சார் ஆற்றலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பயிற்சித் திட்டங்கள் மற்றும் எதிர்காலப் பயிற்சித் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் தொடர்பாடல் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் கீழ், கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தொடர்பான சரியான மற்றும் முறையான தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘RIES’ (Reform Information and Equity Service) இணையத்தளம் தொடர்பாகவும் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக நாட்டின் கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, பல புதிய கட்டமைப்பு மற்றும் நிர்வாக மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலைக் கல்வியில் இருமொழிக் கல்வி முறையை (Bilingual Education) மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அந்தக் கற்றல் வாய்ப்புகள் தொடர்பாக மேலும் முறையான மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேசிய கல்வி நிறுவகத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளைப் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விரிவாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஓ. ஜீ. தயரத்ன பண்டா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










































