அப்புக்கஸ்தென்ன, அமுனுதென்ன – ஒருபுறம் நாடு டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்வதாகவும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை எட்டிப் பிடித்துவிட்டதாகவும் அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது.
ஆனால், மறுபுறம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளான சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் கூட இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன என்பதற்கு அப்புக்கஸ்தென்ன, அமுனுதென்ன பகுதியில் நடந்த துயரச் சம்பவம் ஓர் சாட்சியாகியுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இயங்கி வந்த இஎம்ஓ (EMO – Estate Medical Officer) வைத்தியசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
இதனால், திடீர் சுகயீனம் ஏற்படும் நோயாளர்கள் அவசர சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள எங்கு செல்வது என்றறியாது தவிக்கின்றனர்.
மருத்துவமனை மூடப்பட்டதனால், அப்பகுதி மக்கள் முறையான சிகிச்சைகளைப் பெற அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வெளியில் சென்று சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முயலும் தோட்ட மக்களுக்கும் பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.
அப்பகுதிக்கான வீதிகள் அனைத்தும் நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுவதால், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் தடைபட்டுள்ளன.
அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பேருந்துகளோ அல்லது முச்சக்கர வண்டிகளோ அப்பகுதிக்கு வருவதில்லை.
இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் தீவிர நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்புக்கஸ்தென்ன அமுனுதென்ன பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் அரசாட்சியின் கூற்றுக்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சுகயீனமுற்ற நோயாளர் ஒருவர் அவசர சிகிச்சைப் பெறுவதற்காக வெளியூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, பழுதடைந்த வீதிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து இன்மையால் அவரால் நடக்க முடியவில்லை.
வேறு வழியின்றி அப்பகுதி மக்கள், அந்த நோயாளியைக் கதிரையொன்றில் அமரவைத்து, சுமந்தவாறு பல கிலோமீற்றர்கள் தூரம் கரடுமுரடான பாதையில் தூக்கிச் சென்றுள்ளனர்.
டிஜிட்டல் மயம், நவீன வசதிகள் என்று மேடைகளில் முழங்கும் அரசாங்கத்தின் பேச்சுக்கள் , நாட்டின் ஒரு மூலையில் மனித உயிர்கள் இவ்வாறு கதிரைகளில் தூக்கிச் செல்லப்படும் அவலநிலையைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன் என்ற நியாயமான கேள்வி இப்போது எழுகிறது.
வெற்று விளம்பரங்களாலும், டிஜிட்டல் வார்த்தை ஜாலங்களாலும் மக்களின் பசியையோ, நோயையோ மாற்றிவிட முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளான முறையான வீதிப் போக்குவரத்து மற்றும் வைத்தியசாலை வசதிகளை உறுதிப்படுத்தாமல், அரசாங்கம் எதனைத்தான் ‘சாதனை’ என்று மார்க்கெட்டிங் செய்யப் போகிறது?
அப்புக்கஸ்தென்ன அமுனுதென்ன பகுதி மக்களின் இந்தத் துயரச் சம்பவம், அரசாங்கத்தின் கண்களைத் திறந்து பெருந்தோட்ட மக்களின் சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
வாக்களித்த நீங்கள் இது தொடர்பில் கூற விரும்புவது என்ன?










































