அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு, தமது பெயரில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டுள்ள நிதி தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்போது, சிலர் தமது நிதிச் சொத்துகள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதைய பயனாளிகள், புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ள அனைவரும் குறித்த சத்தியக்கடதாசியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டிக்குப் பணம் வழங்குதல் போன்ற வெளிப்படுத்தப்படாத வருமான மூலங்கள் ஊடாகப் பணம் ஈட்டி, சாதாரண கணக்கெடுப்புகளின்போது தெரியவராத வகையில் வங்கிக் கணக்குகளில் நிதியைச் சேமித்து வைக்கும் சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு மறைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டாலோ அல்லது தகவல்கள் வெளிப்பட்டாலோ, முறைமை ஊடாகத் தமது வங்கிக் கணக்குகளைப் பரிசோதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையிலான சத்தியக்கடதாசியை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மிகவும் தேவையுடைய மக்களுக்கு இந்த நிதியை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பது தமது பொறுப்பு என்பதால், இந்நடவடிக்கை அவசியமானது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர மேலும் தெரிவித்துள்ளார்.























































