பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள மலர்ச்சாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல், பாதசாரிகள் வீதியைக் கடப்பதற்கான சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த வேளையில் இருவர் வீதியைக் கடந்துள்ளனர்.
இதன்போது, இராஜகிரியவிலிருந்து கனத்தை சுற்றுவட்டம் நோக்கிப் பயணித்த ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் வண்டியொன்று பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டு, அதன் சாரதி ஒலி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளரால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படமொன்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய சந்தேகநபரை நேற்று சனிக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் கஞ்சா போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் செலுத்திய ஜீப் வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

























































