2003ஆம் ஆண்டு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு, மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஏழு பேர் கொண்ட நடுவர் குழு ஏகமனதாக வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி, எஹலியகொடை பகுதியில் அமைந்துள்ள யோகம தோட்டம் மற்றும் படங்கல தோட்டத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யட்டியாந்தோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின்போது, நடனமாடிக் கொண்டிருந்த இரு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கரவண்டியொன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்த் தரப்பினரால் வழிமறிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, இரண்டாவது பிரதிவாதியான லியனகே சுனில் சாந்த என்பவர் முச்சக்கரவண்டிக்குள் கைக்குண்டொன்றை வைத்ததைத் தொடர்ந்து அது வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பரமானந்த சங்கர், கோவிந்தசாமி செல்வகுமார் மற்றும் சத்தியசிவம் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் முருகையா போல்ராஜ் மற்றும் நந்தன ஹதிருசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மூவர் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டிருந்தனர். எனினும், முதலாவது பிரதிவாதியான வழக்கு விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய இரு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் 20ஆம் திகதி நிறைவடைந்துள்ளது. இதன்போது, ஏழு பேர் கொண்ட நடுவர் குழு 7–0 என்ற அடிப்படையில் ஏகமனதாக இரு பிரதிவாதிகளையும் குற்றவாளிகளாகத் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி சஹானா மாபா பண்டார இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளார். வழக்குத் தொடுப்புத் தரப்பு சார்பில் எட்டு பொதுமக்கள் சாட்சிகளும் நான்கு உத்தியோகபூர்வ சாட்சிகளும் சாட்சியமளித்துள்ளனர்.
அத்துடன், வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தண்டனைச் சட்டக்கோவையின் 140ஆவது பிரிவின் கீழான சட்டவிரோதக் கூட்டம், 32ஆவது பிரிவின் கீழான பொதுவான நோக்கம், 296ஆவது பிரிவின் கீழான கொலை மற்றும் 317ஆவது பிரிவின் கீழான காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
வழக்குத் தொடுப்புத் தரப்பு சார்பில் அரச சட்டத்தரணி சமிக்க குருகே ஆஜராகியிருந்ததுடன், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சன் மெண்டிஸ், லலித் தஹநாயக்க மற்றும் சட்டத்தரணி சரத் ஜயவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

























































