2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய அனுமதிப்பத்திரங்களில் (Admission Cards) திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று (19) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழி (Online) ஊடாக உரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்படுமாயின், உரிய பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசித்து, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தித் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்திப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசித்து பெயர், முகவரி, பாடம், பரீட்சை மொழிமூலம் மற்றும் பால்நிலை ஆகிய தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள இந்தக் கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















































