உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை தற்போதைய அரசாங்கம் நன்கு அறியும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துச் செல்லும் தவறான வழிநடத்தும் கருத்துக்களை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவரும் பொய்யான கருத்துக்களை வெளியிடக் கூடாது.இதன் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து எமக்குத் தெளிவான புரிதல் உள்ளது.
உதய கம்மன்பில சூத்திரதாரிகள் தொடர்பான புத்தகமொன்றை வெளியிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு அக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியிருந்தனர்.
எதிர்க்கட்சியினர் இவ்விடயத்தில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சித்தாலும் உண்மையை மறைப்பதற்கு இடமளிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.













































