மாத்தறை, வல்கம வடக்கு பகுதியில், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் தனது மூத்த சகோதரரால் வாளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (17) அதிகாலை வேளையில், ஒரு வீட்டிற்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மூத்த சகோதரர் இராணுவ அதிகாரியை வாளால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வல்கம வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ அதிகாரி, தாக்குதலுக்குப் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










































