பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் பொம்மை மற்றும் புதிய செம்மணி அறிக்கை யாழ்ப்பாணத்தில் எரிப்பு
நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுப் புதைகுழி தொடர்பில், முன்னணி தொல்லியலாளர் ஒருவரின் தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை அவரது பொம்மையுடன் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டுள்ளது.
செம்மணி கூட்டுப் புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை தொற்றுநோய் அல்லது இயற்கை பேரிடரினால் ஏற்பட்டிருக்கலாம் என தொல்லியலாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்லியலாளர் அனுஷா வன்னியநாயக்க ஆகியோரால் ஒரு மாதத்திற்கு முன்பு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அறிக்கையில் கண்டறியப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் அரியாலை தபால்கட்டை சந்தியிலிருந்து புதைகுழி வரை பேரணியாக வந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் தலைமையிலான தமிழ் செயற்பாட்டாளர்கள், குறித்த அறிக்கையின் பிரதிகளையும் பேராசிரியரின் உருவப்பொம்மையையும் எரித்தனர்.
உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான சர்வதேச நீதிப் பொறிமுறையின் தலையீட்டை வலியுறுத்தியே அவர்கள் இதனை முன்னெடுத்தனர்.
ராஜ் சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்குமாறு கோரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் கோஷங்களை எழுப்பியவாறு கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களில் ஒரு பகுதியினர் செம்மணி கூட்டுப் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான தீர்க்கமான சாட்சிகளை சுதந்திரமான விசாரணை மூலம் வெளிக்கொணர முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.
குற்றம் இடம்பெற்ற இடமாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி கூட்டுப் புதைகுழி தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கைக்கு எதிராக உறவினர்களால் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செம்மணியில் கூட்டுப் புதைகுழி ஒன்று உள்ளதாக இதற்கு முந்திய அறிக்கைகளில் வந்த முடிவு, இறுதிக் இடைக்கால அறிக்கையில் விடுபட்டுள்ளதாக சட்டத்தரணி கஸ்தூரி அஹலங்கன் ஒக்டோபர் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக மூன்று கட்டங்களாக 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில், சிறுவர்கள் உள்ளிட்ட 583 மனித உடல்களுக்குரிய அஸ்திவாரங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, செம்மணி அகழ்வாராய்ச்சிப் பணிகள் 2026 ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பேராசிரியர் சோமதேவாவின் அறிக்கையின்படி மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 574 மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது. அவரது தலைமையில் யாழ்ப்பாண நீதிமன்ற மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கமாக வழங்கப்பட்ட தகவல்களின்படி, செம்மணியின் அருகிலுள்ள இரண்டு அகழ்வாராய்ச்சிக் குழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 583 ஆகும்.
மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, சிசுக்களின் பால் போத்தல்கள், பாடசாலை பைகள், மழைகோட்டுகள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பொருட்கள் காணப்பட்டன.
அவையனைத்தும் தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன.
இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2025 செப்டம்பரில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின்படி, செம்மணி கூட்டுப் புதைகுழியில் புதைக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் கைதிகள் சட்டவிரோதமாக அல்லது சட்டத்திற்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.









































