வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான அரச வரவு – செலவுத் திட்டமானது, இந்நாட்டு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என என குறிப்பிட்டுள்ளார்
எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்வு, கொடுப்பனவு அதிகரிப்பு, வாகன அனுமதிப்பத்திரம், தடைகள் மற்றும் கடினமான சூழல் கொடுப்பனவு அதிகரிப்பு, போக்குவரத்துக் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட எவ்வித கோரிக்கைகளும் பொறியியலாளர்களுக்கோ அல்லது வைத்திய மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கோ இவ்வாண்டு வரவு – செலவுத் திட்டம் மூலம் வழங்கப்படவில்லை என அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் மேம்பாட்டுக்காகப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், புதிய இளம் மருத்துவர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறும் வேகம் அதிகரிக்கக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைக்கூட வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகள் இந்நாட்டு மருத்துவர்களுக்கும் பொறியியலாளர்களுக்கும் கடுமையான சவாலானதாக அமையலாம் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

































