யாழ்.சாவகச்சேரியில் தந்தையையும், சிறுவயது மகனையும் காவு கொண்ட கோர விபத்து: இரண்டு நாட்களின் பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
சாவகச்சேரியில் தந்தையும், சிறுவயது மகனும் பரிதாபமாக உயிரிழந்த விபத்தில்,வாகனம் ஓட்டியவரைக் காப்பாற்றவும், உண்மையை மூடி மறைக்கவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், தந்தையும், அவரது சிறுவயது மகனும் உயிரிழந்திருந்தனர். விபத்தினையடுத்து வாகனத்தில் நிறை போதையிலிருந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கித் தப்பியோடியுள்ளனர். சம்பவத்துக்குக் காரணமான வாகனச் சாரதி உள்ளிட்டவர்களை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டிருந்தனர்.
வாகனத்தை விட்டு ஓடியவர்கள் வாகனத்தை எடுக்க வர வேண்டும் என வாகனத்தைச் சுற்றிக் காத்திருந்தனர். அப்போது அங்கே மோட்டார்ச் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்டனர். அங்கிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், வாகனத்தில் திறப்பைக் காணவில்லை. உடனே ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தொலைபேசியில் யாருடனோ கதைத்து விட்டு வாகனத்தினுள் சென்று சொல்லி வைத்தால் போல் வாகன ரிமோர்ட்டை எடுத்து வாகனத்தை இயக்கி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனையடுத்து ஊரவர்கள்,
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலரும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் முன்பாக கூடி நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
அப்போது பொலிஸ் உதவி அத்தியட்சகர் தாம் சாரதியைக் கைது செய்து விட்டோம் எனவும் , அவரைச் சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது உறுதியாகியுள்ளது. வேறு போதைப் பொருளும் பாவித்துள்ளாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அப்போது , அங்கு கூடியிருந்தவர்கள் வாகனம் ஓடிய சாரதியை எங்களுக்குத் தெரியும். நீங்கள் கைது செய்து வைத்துள்ளவர் தான் அந்தச் சாரதியா? எனப் பார்க்க வேண்டுமெனக் கோரினார்கள். அதற்குப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்து இரவில் கைது செய்து வைத்துள்ளவரைப் பார்க்க அனுமதிக்க மாட்டோம். காலையில் வந்து பாருங்கள். விபத்தினை நேரில் கண்டவர்கள் இருந்தால் காலை வந்து வாக்குமூலம் தாருங்கள் எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேநேரம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வந்த தொலைபேசி அழைப்புத் தொடர்பிலும் , வாகனத்தை விசாரணைகள் எதுவும் இன்றி உடனடியாக அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்திய செயற்பாடு தொடர்பிலும் அங்கு கூடியிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குத் தொலைபேசி அழைப்புத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் , வாகனத்திற்குச் சேதம் விளைவிக்கக் கூடிய ஏது நிலைமைகள் காணப்பட்டால் வாகனத்தை அங்கிருந்து பொலிஸார் பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியுமெனவும் கூறியுள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க, விபத்து நடந்த நேரம் வாகனத்திலிருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) ஐவரைக் கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது , இன்றைய தினம் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரே அன்றைய தினம் வாகனத்தைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினார் எனத் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த நாளன்று சரணடைந்த நபர் வாகனத்தைச் செலுத்தாத நிலையில் இன்று கைது செய்யப்பட்டவரே வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
இன்று கைது செய்யபப்ட்டவரிடம் போதைப்பொருள் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் அவர் வாகனம் ஓட்டும் போது போதையில் இருந்தார் என உறுதி செய்ய முடியாது.
விபத்து நடந்த நாளில் நீங்கள் கைது செய்து வைத்துள்ளவர் தான் சாரதி என எப்படிச் சொல்லுறீங்க? விபத்து நடைபெற்ற போது நாம் அதில் நின்றோம். எமக்குச் சாரதியைத் தெரியும். கைது செய்துள்ளவரைக் காட்டுங்கள், சாரதி அவரா? என்பதனை நாங்கள் உறுதி செய்கிறோம் என ஊரவர்கள் பொலிஸ் நிலையம் முன் நின்று கூறினார்கள்.
மக்கள் அன்று எது நடந்து விடுமோ? என அஞ்சினார்களோ அதுவே இன்று ஞாயிற்றுக்கிழமை உண்மையாகியுள்ளது. விபத்து நடந்த அன்று சாரதி போதையிலிருந்த நிலையில் அவரைக் காப்பாற்றித் தடயங்களை அழிப்பதற்காகவே இந்த இரண்டு நாட்கள் கால அவகாசம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி இப்போது வலுப்பெற்றுள்ளது.
எனவே, இந்த விபத்து தொடர்பான வழக்கைச் சாவகச்சேரி பொலிஸாரே தொடர்ந்து விசாரிப்பதைத் தவிர்த்து சுயாதீனமான உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றிடம் ஒப்படைக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய உண்மையான சாரதிக்கும், அவருக்கு உடந்தையாகவிருந்து ஆள்மாறாட்டம் செய்யத் துணைபோன பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக எவ்வித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதே உயிரிழந்த அந்த இரு ஆத்மாக்களுக்கும், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கும் செய்யக் கூடிய உண்மையான நீதியாக
































