லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது எரிவாயு விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2,398 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அமைச்சர் வசந்த சமரசிங்க விடுத்த கோரிக்கை மற்றும் நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக சவுதி அரம்கோ விலை மற்றும் கப்பல் கட்டணங்கள் உள்ளிட்ட இறக்குமதிச் செலவுகள் அதிகரித்த போதிலும், மூன்று மாதங்களாக எவ்வித விலை திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் அந்த நட்டத்தை நிறுவனமே தாங்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தொடர்ச்சியாக ஏற்பட்ட நட்டம் காரணமாகவே அண்மையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,775 ரூபாவினால் அதிகரிக்க நேரிட்டதாக அந்நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.









































