இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) சார்லோட் கள அலுவலகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த வாரம் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிக்கவும், நாடுகடந்த குற்றக் கும்பல்களின் செயல்பாடுகளைத் தடுக்கவும் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா பலப்படுத்தி வருவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
“இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், FBI-ன் சார்லோட் கள அலுவலகத்தைச் சேர்ந்த குழுவொன்று நவம்பர் 16 முதல் 22 வரை கொழும்புக்கு வருகை தரவுள்ளது. இவர்கள், இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விசாரணைகளுக்கு ஆதரவளிக்கவும், சிறப்பு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், அத்துடன் நாடுகடந்த மோசடி வலைப்பின்னல்களைக் கண்டறிந்து முறியடிப்பதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளின் திறனை வலுப்படுத்தவும் FBI ஒரு பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது.
இந்த வருகையின் போது, FBI அதிகாரிகள், இலங்கை சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் (digital forensics) மற்றும் வழக்குத் தயாரிப்பு போன்ற அம்சங்களில் பணியாற்றுவார்கள். இந்த ஒத்துழைப்பானது, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், குற்றச் செயல்களைக் கண்டறியவும், இணைய மோசடிகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக வலுவான வழக்குகளைக் கட்டமைக்கவும் புலனாய்வாளர்களுக்கு உதவும். மேலும், நாடுகடந்த குற்றக் கும்பல்கள் இலங்கையின் நிலப்பரப்பைப் பயன்படுத்தி இணையம் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் திறனையும் இது இலங்கைக்கு வழங்கும்.
“வெளிநாடுகளில் இயங்கும் குற்றக் கும்பல்கள் பல பில்லியன் டாலர்களைத் திருடி வருகின்றன; அவற்றை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்தார். “FBI-ன் புலனாய்வு நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்கவும், மேலும் பல அமெரிக்கர்களும் இலங்கையர்களும் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்கவும் முடியும்.”
இந்த வருகையானது, புலனாய்வுத் திறன்களை வலுப்படுத்தவும், மோசடி மையங்களின் செயல்பாடுகளை முறியடிக்கவும் இலங்கை அதிகாரிகளுடன் FBI மேற்கொள்ளவிருக்கும் நீண்டகால ஒத்துழைப்பின் தொடக்கமாகும். இந்த முன்னெடுப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆதரவளிப்பதுடன், FBI-உடன் இணைந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
“நாடுகடந்த குற்றக் கும்பல்கள் எங்கெல்லாம் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் அவற்றைத் தேடி நடவடிக்கை எடுக்கவும், அமெரிக்கக் குடிமக்களை நிதிச் சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும், சர்வதேச சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.







































