செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் (CARED) அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சங்கம் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விரிவான ஆய்வகப் பரிசோதனைகள், மரபணு (DNA) அடையாளப்படுத்தல்கள் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்த முழுமையான தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் வெறும் ஆரம்பநிலை அவதானிப்புகளை இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அகழ்ந்தெடுக்கப்பட்ட 574 மனித எலும்புக்கூடுகள் யார், எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை என்பதோடு அகழ்வாய்வுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுத் தடயங்கள் சிதைக்கப்பட்டமை குறித்தும் சுயாதீன விசாரணை அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, உள்ளக விசாரணைகளை நிராகரித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் மற்றும் மரபணு நிபுணர்களின் நேரடிப் பங்கேற்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உடனடியாக நிறுவ வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த 1998 ஆம் ஆண்டு அடையாளம் காட்டப்பட்ட ஏனைய 21 இடங்களையும் அகழ்வு செய்ய வேண்டும் எனவும் நீதிக்காகப் போராடும் உறவினர்களின் பங்கேற்புடன் அனைத்து உண்மைகளும் தமிழில் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













































