யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ பௌத்த விகாரைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றும் (24.11.2026) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்குமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் (23) ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் விகாரைக் கட்டுமானங்களை அகற்றுமாறும் வலியுறுத்தி காணி உரிமையாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் முன்னிட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 42ஆவது மாதமாக நடைபெற்ற இப்போராட்டம், இம்மாதத்திலும் தொடர்கின்றது.
இதேவேளை, தையிட்டி காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் காணி உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
காணிப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமது பூர்வீகக் காணிகளை மீட்பதற்கான கோரிக்கையை முன்வைத்து தையிட்டி மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













