யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், மொத்தம் 526 மாணவர்கள் இலவசக் கண்ணாடிகளைப் பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (நவம்பர் 14) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தெரிவுச் செயல்முறையின் போது, 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, ஒரு மாத காலத்திற்குள் இலவசக் கண்ணாடிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ‘ஸ்ட்ரவுட் ரோட்டரி கிளப்’ (Stroud Rotary Club) மற்றும் ‘விஷ் ஃபவுண்டேஷன்’ (Wish Foundation) ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்குகின்றன.
இத்திட்டத்தின் முதற்கட்டமானது ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் கட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷான் கமகே, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் டி. வேல்நம்பி, பீடாதிபதிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்


































